காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்
அமெரிக்கா காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தில், இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் இந்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இது, நல்ல மற்றும் பொருத்தமான முயற்சி என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். "இந்த விவகாரத்தில் விசாரணை செய்யப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இது நல்லது மட்டும் சரியானது. விசாரணை முடிவுகளை பார்க்க ஆவலாக உள்ளோம்" என பிளிங்கன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம்"
இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிக்கையில், அடையாளம் கூறப்படாத இந்திய அதிகாரிக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, பிளிங்கன் இவ்வாறு பதிலளித்தார். மேலும், "இது நடைபெற்று வரும் ஒரு சட்டபூர்வமான விவகாரம். இதற்கு என்னால் விரிவாக பதில் அளிக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம் என என்னால் கூறமுடியும்" "கடந்த வாரங்களில் எங்களில் பலர் இதை நேரடியாக இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்," என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இருப்பது என்ன?
மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், 'சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் நிறுவனரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, படுகொலை செய்ய இந்தியரான நிகில் குப்தா என்பவர் அடியாளை பணியமரத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், நிகில் குப்தாவிற்கும் இந்திய அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்திய அதிகாரியின் அதிக அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் அடியாளை பணியமர்த்த முயன்றதாகவும், இவர்கள் இருவரும் டெல்லியில் சந்தித்து பேசிக் கொண்டதாகவும், அந்த குற்றப்பத்திரிக்கை கூறுகிறது. நிகில் குப்தா அந்த அதிகாரிக்கு, "நாம், நம் அனைத்து இலக்குகளை தகர்ப்போம்" என செய்தி அனுப்பி இருந்ததாகவும், அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.