இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான்
ஜப்பான் இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை 10 தொட்டிகளில் இருந்த 7,800 டன் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கடலில் திறந்து விடப்பட்டது. ஜப்பானை கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்குள் கடல் நீர் புகுந்து அணு உலைகளை சேதப்படுத்தியது. சேதமடைந்த அணு உலைகளில் இருந்த கதிரியக்க எரிபொருள்களை குளிர்விக்க ஏராளமான கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது. அந்த கதிரியக்க அணு உலை நீரை சுத்திகரித்து தற்போது ஜப்பான் சிறிது சிறிதாக கடலில் திறந்து விட்டு வருகிறது.
மேலும் 7,800 டன் அணு உலை கழிவு நீரை திறந்து விடும் ஜப்பான்
ஜப்பான் மீண்டும் இன்று இரண்டாவது முறையாக அணு உலை கழிவு நீரை பசுபிக் பெருங்கடலில் திறந்து விட்டுள்ளது. இன்று முதல் 17 நாட்களில் 7,800 டன் அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் திட்டமிட்டுள்ளது. புகுஷிமா அணு உலைக்குள் சுமார் 1000 தொட்டிகளில் 1.34 மில்லியன் டன் அணு உலை கழிவு நீர் உள்ளது. இதனை சுத்திகரித்து படிப்படியாக வரும் காலங்களில் கடலில் திறந்து விட ஜப்பான அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது. சீனா மற்றும் தென்கொரியா ஜப்பான் இடம் இருந்து இறக்குமதி செய்யும் மீன்களுக்கு தடை விதித்தது. மேலும் உள்நாட்டிலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.