180 பேர் பலி; ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
திங்களன்று (செப்டம்பர் 23) நூற்றுக்கணக்கான ஹிஸ்பூல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் அதன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இதில் 180 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அறிவித்துள்ளது. மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை லெபனான் அதிகாரி உறுதிப்படுத்தினார். ஏறக்குறைய ஒரு வருட மோதலில் எல்லை தாண்டிய கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் லெபனான் அமைந்துள்ள நிலையில், காசாவில் உள்ள ஹமாசுக்கு ஆதாரவாக இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக திட்டமிட்டு பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு என இஸ்ரேல் அதிரடி காட்டிய நிலையில், தற்போது ஹிஸ்புல்லாவினரின் இருப்பிடங்களை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலி
லெபனானின் சுகாதார அமைச்சகம் திங்களன்று இஸ்ரேலின் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட பொதுமக்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திங்களன்று இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லாவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே, திங்களன்று தெற்கு லெபனானில் வசிப்பவர்கள் லெபனான் எண்ணிலிருந்து அழைப்புகளைப் பெற்றனர். அதில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக தங்களை 1,000 மீட்டர் தொலைவிற்கு செல்லுமாறு கட்டளையிடபட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட் வரையிலான தொலைபேசிகளில் இந்த அழைப்புகள் சென்றுள்ளன.