மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்
பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதிக்குள் எரிபொருள் எதுவும் நுழையவில்லை. அதனால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த 7 குழந்தைகளும் 29 பெரியவர்களும் அதே பகுதியில் தான் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அல்-ஷிஃபா மருத்துவமனை இயக்குநர் முகமது அபு சல்மியா கூறியுள்ளார். "மருத்துவமனை வளாகத்தில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. மேலும் பிணவறைகளில் மின்சாரம் இல்லை. அதனால், நாங்கள் உயிரிழந்தவர்களை ஒரு பெரிய புதைகுழியில் புதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று இயக்குநர் முகமது அபு சல்மியா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை வெளியேற்ற எந்த வழியும் இல்லை: காசா சுகாதார அமைச்சகம்
இதற்கிடையில், அந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை வெளியேற்ற தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறி இருந்தது. ஆனால், இது குறித்து பேசி இருக்கும் காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை வெளியேற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் வெளியேற்றுவதற்கான எந்த வழிமுறையும் இல்லை. குழந்தைகளை எகிப்து, மேற்குக் கரை அல்லது ஆக்கிரமிப்பு மருத்துவமனைகளுக்குக் கூட மாற்றுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அந்த குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கையைப் பற்றி தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.
குண்டு துளைக்காத கதவுகளால் ஆன ஹமாஸ் சுரங்கப்பாதை
காசாவில் உள்ள ரந்திசி மருத்துவமனைக்கு செல்லும் ஹமாஸ் ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஹமாஸின் கடற்படை செயற்பாட்டாளரின் வீட்டிற்கு அடுத்ததாக அந்த சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதனால், காசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து தான் ஹமாஸ் ரகசியமாக செயல்படுகிறது என்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ஹமாஸ் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. அந்த சுரங்கப்பாதை தரை மட்டத்திலிருந்து சுமார் 20 மீட்டர் ஆழத்தில் உள்ளது என்றும், குண்டு துளைக்காத மற்றும் வெடிபொருட்களால் தகர்க்க முடியாதபடி அந்த சுரங்கப்பாதையின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.