இஸ்ரேலில் விமானத்தை மோதி அழிக்க திட்டமிட்ட ஃபிளைதுபாய் உதவி விமானிக்கு மரண தண்டனை?
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க திட்டமிட்ட ஃபிளைதுபாய் நிறுவனத்தின் உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, விமான கட்டுப்பாட்டு அறையில் விமான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கோடரியால் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் விமானத்தை மோதி அழிக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம்
'மொசாத்' மற்றும் சர்வதேச முகமைகள் தீவிர விசாரணை
டெல் அவிவ் நகருக்கு விமானங்கள் இயக்கும் நிறுவனங்களை ஆராய்ந்து, அதற்காகவே ஃபிளைதுபாய் நிறுவனத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ஹமாம் அல்-ஹம்மாமி பணியில் சேர்ந்துள்ளார்.
எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலும் இன்றி, தனிநபர் தீவிரவாத எண்ணத்துடன் இவர் இச்சதியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அபூதாபியில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், அமெரிக்க உளவு முகமைகள் மற்றும் சவுதி, ஓமன் நாட்டு அதிகாரிகள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.
ஓமன் மற்றும் இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் இல்லாத நிலையில், ஓமன் நாட்டவரான அல்-ஹம்மாமி எவ்வாறு இஸ்ரேல் செல்லும் விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
UAE அரசு வழக்கறிஞர்கள் இவருக்கு மரண தண்டனையை பெற்றுத்தரத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.