9/11 பாணி தாக்குதல்: பிளைதுபாய் விமானத்தை டெல் அவீவ் கட்டடத்தின் மீது மோதுவதுதான் ஓமானி விமானியின் திட்டமாம்
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்திற்குச் சென்ற பிளைதுபாய் விமானத்தை கடத்தி, டெல் அவீவில் உள்ள வானளாவிய கட்டடத்தில் மோதி பயங்கரவாத தாக்குதல் நடத்த ஓமானி இணை விமானி சதித் திட்டம் தீட்டியிருந்தது இத்தாலிய ஊடகமான 'Corriere Della Sera' செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய உளவு அமைப்புகள் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதல்
கோடரித் தாக்குதலும் இந்திய கேப்டனின் வீரமும்
ஓமான் நாட்டை சேர்ந்த இணை விமானியான ஹம்மாம் அல்-ஹம்மாமி, பிரார்த்தனை செய்வது போல் நடித்துக் திடீரென அவசரகாலக் கோடரியை எடுத்து, இந்தியாவை சேர்ந்த முதன்மை கேப்டன் ஸ்மித் மச்சார் மீது பின்னால் இருந்து கொடூரத் தாக்குதல் நடத்தினான்.
தலையில் பலத்த காயம், கையில் ஆழமான வெட்டு மற்றும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் காக்க்பிட் கதவைத் திறந்து வெளியிலிருந்த பயணிகளுக்கும், விடுமுறையில் பயணித்த மற்ற இரு விமானிகளுக்கும் தகவல் அளித்தார்.
சதி திட்டம்
நடுவானில் 16,000 அடி சரிந்த விமானம்
கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஓமன் இணை விமானி, ஆட்டோபைலட்டை நிறுத்திவிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டு லீவரை ஆக்ரோஷமாக அமுக்கினான்.
இதனால் போயிங் 737 ரக விமானம் வெறும் 30 வினாடிகளில் 16,000 அடி கீழே சரிந்தது. விமானத்தின் வேகம் மணிக்கு 970 கி.மீ-ஐத் தாண்டியதால் அதன் வால் பகுதி சேதமடைந்தது.
அதுமட்டுமின்றி, எஞ்சின்களுக்கான எரிபொருள் சுவிட்சுகளை "Cutoff" நிலைக்கு மாற்றி எஞ்சின்களையும், மின்சார உருவாக்கத்தையும் அவன் முடக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நடவடிக்கை
பயணிகளின் அதிரடி நடவடிக்கை
நடுவானில் அவசரகால விளக்குகள் எரிந்ததும், காக்பிட்டில் ரத்த வெள்ளத்தை கண்ட பயணிகள் மற்றும் விடுமுறையில் பயணித்த ஆஃப்-டூட்டி விமானிகள் காக்பிட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹம்மாமை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், ஆஃப்-டூட்டி விமானிகள் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் சவுதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தை இஸ்ரேல் "பயங்கரவாதத் தாக்குதல்" என உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஓமன் நாட்டு விமானிக்கு எவ்வாறு இஸ்ரேலிய வான்வெளி அனுமதி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.