ஜஸ்டின் ட்ரூடோவை நீக்க எலான் மஸ்கிடம் வந்த கோரிக்கை; அவர் கொடுத்த பதில்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வீழ்ச்சியை கணித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில். எலான் மஸ்க் ஆதரவளித்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக அவர் பல மில்லியன்கள் செலவிட்டு பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அகற்ற உதவுமாறு ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எலான் மஸ்கின் பதில்
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், வரவிருக்கும் தேர்தலில் அவர் வெளியேறுவார் என்று தெரிவித்துள்ளார். அக்டோபர் 2025க்குள் கனடாவின் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், எலான் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு அரசாங்க மேற்பார்வைக்காக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கையை மஸ்க் கண்டித்தார். கூடுதலாக, 2022ஆம் ஆண்டில், கனடா பிரதமர் கொரோனா தடுப்பூசி ஆணைகளுக்கு எதிரான டிரக்கர் எதிர்ப்புகளைத் தீர்க்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்திய பின்னர், ட்ரூடோவை அடோல்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டு மஸ்க் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பதிவை மஸ்க் பின்னர் நீக்கினாலும், ட்ரூடோ மீதான விமர்சனத்தைக் கைவிடவில்லை.