கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: நிபுணர்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதைய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமையைப் பெற முடியும் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகளின் (AAPI) வெற்றி நிதியத்தின் தலைவரும் நிறுவனருமான சேகர் நரசிம்மன் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 5 அன்று அமெரிக்கா தனது ஜனாதிபதியை முடிவு செய்ய வாக்களிக்கின்றது.
க்ரீன் கார்டு பெற பலர் காத்திருப்பு
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுகளுக்காக நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டுள்ளனர். டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உட்பட இந்தியாவில் இருந்து பல திறமையான வல்லுநர்கள் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற பல தசாப்தங்களாக காத்திருக்கும் நேரத்தை எதிர்கொள்கின்றனர் க்ரீன் கார்டு என்பது அதிகாரப்பூர்வமாக நிரந்தர ரெசிடெண்ட் கார்டு என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் நிரந்தர வதிவாளராக ஒரு நபரின் நிலையை குறிக்கிறது. "உங்களிடம் கிரீன் கார்டு இருந்தால், ஐந்து வருடங்கள் இங்கு இருந்தால், குடியுரிமையைப் பெறுங்கள். நேரம் இருக்கிறது. வாக்களிக்க பதிவு செய்யுங்கள்" என்று நரசிம்மன் கூறியதாக பிடிஐ மேற்கோளிட்டுள்ளது.
ஆசிய-அமெரிக்கா மக்களிடையே அதிகரிக்கும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஜனாதிபதித் தேர்தல் இந்திய-அமெரிக்கர்கள், ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பிற குழுக்களிடையே குறிப்பிடத்தக்க உற்சாகத்தை உருவாக்கியுள்ளது என்று நரசிம்மன் குறிப்பிட்டார். குடியுரிமைக்கு தகுதி பெற, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்திருக்க வேண்டும். "எனவே, உங்களிடம் ஏற்கனவே இல்லையென்றால், உங்கள் குடியுரிமையைப் பெறுங்கள். வாக்களிக்க பதிவு செய்யுங்கள். வாக்களியுங்கள், மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்கவும், "என்று அவர் வலியுறுத்தினார், இதையெல்லாம் 100 நாட்களில் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.