ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல்
ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன், அந்த தாக்குதல் குறித்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கு எச்சரித்ததாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக்குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கால் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் தகவலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முற்றிலும் பொய் என மறுத்துவிட்டார். இஸ்ரேலில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹமாஸ் நடத்திய தாக்குதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தாக்குதலை தடுக்க தவறியது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் தோல்வியை காட்டுவதாக கூறப்படுகிறது. "இதுபோன்ற நிகழ்வு நடக்கலாம் என எகிப்து 3 நாட்களுக்கு முன்னரே இஸ்ரேலை எச்சரித்திருந்தது எங்களுக்கு தெரியும்" என மைக்கேல் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் பேசியதாக ஏஎஃப்பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டதாக எகிப்து தகவல்
ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டதாக, எகிப்து உளவுத்துறை அதிகாரி ஏபி செய்தி முகமை இடம் கூறியிருந்தார். "நாங்கள் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறலாம் என இஸ்ரேலை எச்சரித்து இருந்தோம். அது மிக விரைவில் மற்றும் மிகப்பெரியதாக இருக்கும் எனக் கூறியிருந்தோம்". "ஆனால் அந்த எச்சரிக்கையை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை" என பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார். மற்றொரு கெய்ரோ(எகிப்தின் தலைநகரம்) அதிகாரி கூறுகையில், இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா பகுதியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், மேற்கு கரையில் அவர்கள் கவனம் செலுத்திவந்ததாக கூறினார். காஸா உடன் தன் எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கும் எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பிரச்சனைகளில் மத்தியஸ்திரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.