ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், முதல் நிலநடுக்கம் ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்கு மியாசாகி மாகாணத்தில் சுனாமி தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதங்களை சமாளிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
அதிக நிலநடுக்க அபாயங்களை எதிர்கொள்ளும் ஜப்பான்
உலகில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ள ஜப்பானில், மிகவும் சக்திவாய்ந்த பூகம்பங்களை கூட தாங்கக்கூடிய வகையில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை லேசானவை. சமீப காலங்களில் ஜப்பானின் மிகப்பெரிய நிலநடுக்கம் என்பது மார்ச் 2011இல் அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். இது சுனாமியை ஏற்படுத்தியதோடு, சுமார் 18,500 பேரின் உயிரிழப்பிற்கு காரணமானது. மேலும், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தையும் மூழ்கடித்து, மிகப்பெரிய அணுசக்தி விபத்திற்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேரழிவில் மட்டும் பொருளாதார ரீதியாக $112 பில்லியன் அளவிற்கு ஜப்பான் இழப்பைச் சந்தித்தது.