
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 800 க்கும் மேல் அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 11.47 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்திற்கு 27 கிலோமீட்டர் கிழக்கே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வெறும் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சில இந்திய பகுதிகள் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்
குனார் மாகாணத்தில் மூன்று கிராமங்கள் முழுமையாக அழிந்துள்ளன. மண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று உள்நாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதின் கனி தெரிவித்துள்ளார். குனார், நங்கர்ஹர் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் ஒரு நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதற்கு முன், கடந்த அக்டோபர் 2023 இல் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.