Loading...
அமெரிக்க குடியுரிமைக்கு தடை: 'பிரசவ சுற்றுலா' மீது டிரம்ப் நடவடிக்கை
'பிரசவ சுற்றுலா'வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

அமெரிக்க குடியுரிமைக்கு தடை: 'பிரசவ சுற்றுலா' மீது டிரம்ப் நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 07, 2026
08:41 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் 'பிரசவ சுற்றுலா'வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பணக்காரர்கள் பணம் கொடுத்து அமெரிக்க குடியுரிமையை விலைக்கு வாங்குவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். பிரசவத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி தானாகவே குடியுரிமை வழங்கப்படாது. மேலும், அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதரக ஊழியர்களின் குழந்தைகள், எதிரி நாடுகளை சேர்ந்தவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கும் பிறப்புரிமை குடியுரிமை மறுக்கப்படும்.

விசா மோசடி

விசா மோசடியை தடுக்கும் திட்டம்

சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்து பிரசவிக்கும் நடவடிக்கைகளை 'விசா மோசடி' என அமெரிக்க நிர்வாகம் வரையறுத்துள்ளது.

இதற்காக தூதரக அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கி விசா பெறுபவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரசவித்து குடியுரிமை பெறுவதற்காக திட்டமிட்டு செயல்படும் சர்வதேச அமைப்புகள் மற்றும் முகவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை ஒருங்கிணைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சவால்கள்

சட்டச் சவால்கள் மற்றும் பின்னணி

அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் கீழ் பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முந்தைய முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விசா மோசடி விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய நிர்வாக உத்தரவும் நீதிமன்ற சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT