
சார்லி கிர்க் படுகொலை எதிரொலி: தீவிர இடதுசாரி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அன்டிஃபா (Antifa) என்ற தீவிர இடதுசாரி அமைப்பை பெரிய பயங்கரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளார். தனது நெருங்கிய உதவியாளரும் அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை அவர் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தன்னுடைய பதிவில், "அன்டிஃபா ஒரு நோயுற்ற, ஆபத்தான, தீவிர இடதுசாரி சீர்கேடு. இதனை பெரிய பயங்கரவாத அமைப்பு என நான் அறிவிக்கிறேன்." என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அன்டிஃபாவுக்கு நிதி அளிப்பவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அன்டிஃபா
அன்டிஃபாவிற்கு தடை விதிப்பது சட்டப்படி சரியா?
இந்த அறிவிப்பு, அன்டிஃபா அமைப்புக்கு எதிரான அதிபரின் நிலைப்பாட்டில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு பரவலாக்கப்பட்ட, முறையான அமைப்பு இல்லாத ஒரு இயக்கத்தை சட்டப்படி எப்படிப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை. அன்டிஃபா என்பது பாசிசத்திற்கு எதிரானவர்கள் (anti-fascists) என்பதன் சுருக்கமாகும். இது பாசிச, நவ-நாஜி மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை எதிர்ப்பவர்களை உள்ளடக்கிய ஒரு பரவலாக்கப்பட்ட நெட்வொர்க் ஆகும். இந்த குழுக்கள் பெரும்பாலும் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக அறியப்பட்டாலும், அவை ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.