'என் ஆதரவால்தான் நெதன்யாகு ஜெயிச்சிருக்காரு': இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் தற்பெருமை
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிப்பதற்கு தனது ஆதரவே முக்கியக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார். தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தான் அளித்த ஆதரவே தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். "பிரதமர் பிபி நெதன்யாகுவிற்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்த பின்னரே தேர்தல் களம் அப்படியே மாறியது. ஒரு பெரும் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நெதன்யாகு, தற்போது மீண்டும் ஒரு பெரிய மீட்சியுடன் சமநிலை அல்லது வெற்றியை நோக்கிச் செல்ல எனது ஆதரவே காரணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் நெதன்யாகு அழைப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பகுதி வாக்கு எண்ணிக்கைத் தரவுகளின்படி, நெதன்யாகுவின் வலதுசாரி ஆதரவுக் கூட்டணி 55 இடங்களிலும், எதிர்க்கட்சிக் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலில் ஆட்சியைமைக்க அனைத்து வலதுசாரி மற்றும் சீயோனிசக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
அரபு சமூகப் பிரதிநிதித்துவக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைப்பது என்பது "அவமானம் மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று" எனத் தெரிவித்து, அவர்களின் ஆதரவை நெதன்யாகு முற்றிலும் நிராகரித்துள்ளார்.
பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு இத்தேர்தலில் மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.