பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பது, தடைசெய்யப்பட்ட அமைப்புக்கான ஆதரவை ஊக்குவிப்பதற்காக கூட்டங்களில் உரையாடுவது மற்றும் பயங்கரவாத அமைப்பை வழிநடத்துவது போன்ற குற்றங்களுக்காக பாகிஸ்தான் மற்றும் பிரிட்டனின் குடிமகனான அஞ்செம் சவுத்ரி(56) மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கனேடிய நாட்டவரான காலித் ஹுசைனும் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது
"ஜூலை 17ஆம் தேதி, கிழக்கு லண்டனை சேர்ந்த ஒரு 56 வயது நபரையும், ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து ஒரு 28 வயது கனேடிய நாட்டவரையும் போலீஸார் கைது செய்தனர்," என்று லண்டன் போலீஸ் இன்று தெரிவித்தது. "பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 41 இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை தடுத்து வைப்பதற்கான தடுப்புக்காவல் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க இது அனுமதிக்கிறது" என்று லண்டன் போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் ஜூலை 24ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.