சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன உயர்மட்ட அதிகாரி வாங் யீயை திங்களன்று(ஜூன் 19) பெய்ஜிங்கில் வைத்து சந்தித்தார். எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளும் பெய்ஜிங்கில் இருக்கும் தியோயுடாய் மாநில விருந்தினர் மாளிகையில் உள்ள சிவப்பு கம்பள மண்டபத்தில் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். இதை தாண்டி அவர்கள் வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பிளிங்கன் இன்று மதியம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிளிங்கனின் சந்திப்பை பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இது குறித்து சீன வெளியுறவுத் துறை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்றதற்கு பிறகு, முதல்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங்குடன் நேற்று 7-1/2 மணி நேரத்திற்கும் மேலாக "நேர்மையான" மற்றும் "ஆக்கபூர்வமான" பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும், தைவான், வர்த்தகம், மனித உரிமைகள் மீறல் போன்ற பிரச்சனைகளில் உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இருநாட்டு உறவுகளை நிலைநிறுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதனால், இந்த பேச்சு வார்த்தைகளை தொடர கின் கேங் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.