
'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்
செய்தி முன்னோட்டம்
பிணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் குழு மீறியதால் தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.
துபாயில் நடந்த COP28 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயலாளர் ஆண்டனி பிளிங்கன், "ஜெருசலேமில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் நடத்தியது" என்றும் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஹமாஸ் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தான் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
ட்ஜ்வ்ஹ்
இடைநிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த தொடரும் முயற்சிகள்
மேலும் வெள்ளிக்கிழமை அன்று, ஹமாஸ், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தெற்கு கடலோர பகுதியில் இருக்கும் அஷ்டோடில் உள்ள எல்லை நகரங்களை குறிவைத்து சுமார் 50 ராக்கெட்டுகள் காசாவில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவமும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "இடைநிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில்" அமரிக்கா ஈடுபடும் என்றும், இஸ்ரேல் மற்றும் மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கத்தாருடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.