காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா
காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினரையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி பார்த்து, அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போரால் தற்போது வரை 8,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காசா மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், அதிகரிக்கும் சாமானிய மக்களின் உயிரிழப்பை தடுக்க இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை இருந்தாலும், "பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு உட்பட்டு அதை செய்ய வேண்டும்" என அமெரிக்க அதிபர், இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவிற்குள் அதிக நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு
இஸ்ரேல் பிரதமரை தொடர்ந்து, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உடன் தொலைபேசியில் பைடன் உரையாற்றினார். இவ்விரு தலைவர்களும் காசாவிற்குள் செல்லும் நிவாரண உதவிகளை, இன்று முதல் அதிகரிக்க உறுதிக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை அதிகரிக்க அழைப்பு விடுத்ததையொட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசியில் உரையாடிய சுனக் மற்றும் மேக்ரான், "காசா அவசர மனிதாபிமான ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக" இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் 17 டன் நிவாரண பொருட்களை காசாவிற்கு தரை வழியாக கொண்டு செல்ல, எகிப்து நாட்டுக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.