உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முறை அமெரிக்கா 375 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்க இருக்கிறது. மேலும், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் G7 நாடுகள் கலந்து கொள்ளும் G7 உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றிருந்த ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், 375 மில்லியன் டாலர் மதிப்பிலான வெடிமருந்துகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அடங்கிய இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்கு $37 பில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது
"G7 நாடுகளுடன் சேர்ந்து நாங்களும் உங்களுக்காக இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று பைடன் ஜெலென்ஸ்கியிடம் கூறினார். இந்த கூட்டத்தின் போது, ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைன் தன்னைதானே பாதுகாத்து கொள்வதற்கு உதவ அமெரிக்கா தயார்நிலையில் இருக்கிறது என்று பைடன் கூறியுள்ளார். மேலும், F-16 போன்ற நான்காம் தலைமுறை போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்கா அறிவித்திருக்கும் புதிய ராணுவ உதவிக்கும், இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய $37 பில்லியன் நிதி உதவிக்கும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.