பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக பிபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பங்களாதேஷில் கொண்டுவரப்பட்ட புதிய இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஜூலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர். நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்த நிலையிலும், மாணவர்கள் டாக்காவை நோக்கி அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்து முன்னேறிய நிலையில், அந்நாட்டு ராணுவமும் அரசுக்கு எதிராக திரும்பியது.
ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் பங்களாதேஷ் ராணுவம்
பங்களாதேஷில் நிலைமை மோசமடைந்த நிலையில், 45 நிமிடத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு அந்நாட்டு ராணுவம் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் பதவியை விட்டு வெளியேறி, ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.