Loading...
ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த மறுத்தால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்: வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை
2024 ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த மறுத்தால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்: வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா தங்களிடம் ஒப்படைக்க மறுத்தால், இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை (ICJ) அணுக நேரிடும் என வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உதின் அகமது எச்சரித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள அவர், இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். 2024 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மாணவர் எழுச்சியைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திரப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை

டிசம்பர் 16-ஆம் தேதி நாடு திரும்பும் ஷேக் ஹசீனாவின் திட்டம்

1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் வெற்றியைக் குறிக்கும் 'விஜய் திபோஸ்' நாளான டிசம்பர் 16-ஆம் தேதி தாய்நாடு திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

இதற்காக தமக்குப் புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை வழங்குமாறு அவரது சட்டப் பிரதிநிதிகள் மூலம் வங்கதேசத் தூதரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சட்டப்பூர்வமாக நாடு கடத்தப்படும் நடைமுறை வழியாக மட்டுமே அவர் திரும்ப முடியும் என்றும், அவ்வாறு வங்கதேசம் வந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் சபாநாயகர் ஹபீஸ் உதின் அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹசீனாவின் இந்த அறிவிப்பு தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கான நாடகம் மட்டுமே என்றும், அவர் வங்கதேசம் திரும்ப மாட்டார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்தியா

1971 போர் மற்றும் இந்தியா மீதான சர்ச்சைக் கருத்துகள்

இஸ்லாமாபாத் பயணத்தின் போது இந்தியா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சபாநாயகர் ஹபீஸ் உதின் அகமது, 1971 விடுதலைப் போரில் இந்தியா வங்காளிகளுக்கு உதவவில்லை என்றும், பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே செயல்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகால ஹசீனாவின் ஆட்சியில் வங்கதேசம் அண்டை நாட்டின் காலனியாக மாறியிருந்ததாகவும், இதனால் மக்கள் கடும் துயரங்களைச் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காஷ்மீர் விவகாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியாவின் நிலைப்பாடு

டாக்காவில் வெடித்த கண்டனம்

மறுபுறம், வங்கதேசத் தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர், ஷேக் ஹசீனாவை ஒரு பயங்கரவாதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் சிரமங்களை இந்தியா இப்போது உணர்ந்து வருவதாகவும், வீட்டிற்குள் அழைத்த ஒருவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும்போது அவரை வெளியேற்றவும் முடியாமல் சகித்துக்கொள்ளவும் முடியாமல் இந்தியா தவிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

2024 போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பரில் வங்கதேச நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்துப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், வங்கதேசத்தின் நாடு கடத்தல் கோரிக்கை சட்ட நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT