பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்
தாலிபான்களிடம் இருந்து மக்கள் விலகி இருப்பதற்கு முக்கிய காரணம், பெண்கல்வி மீதான தொடர்ச்சியான தடையென, தாலிபானால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பெண் மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அறிவு இல்லாத சமூகம் 'இருண்ட' சமூகம் எனவும் தெரிவித்தார். தலிபானின் எல்லைகள் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள, கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் ஷேர் முகமது இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
கல்வி என்பது அனைவரின் உரிமை- ஸ்டானிக்சாய்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஸ்டானிக்சாய், "கல்வி என்பது அனைவரின் உரிமை. இறைவன் இயற்கையாக அனைவருக்கும் வழங்கிய உரிமை" எனவும் தெரிவித்தார். "அந்த உரிமையை யாராவது மக்களிடமிருந்து பறிக்க முடியுமா?. இந்த உரிமையை யாராவது மீறினால், இது ஆப்கானியர்களுக்கு எதிரான அடக்குமுறையாகும்" "அனைவருக்கும் கல்வி நிறுவனங்களின் கதவுகளை மீண்டும் திறக்க முயற்சி செய்யுங்கள். இன்று, அண்டை நாடுகளுடனும், உலகத்துடனும் நமது ஒரே பிரச்சனை கல்விப் பிரச்சினையால் ஏற்படுகிறது." "ஒரு தேசம் நம்மிடமிருந்து தூரமாகி, நம் மீது வருத்தமடைகிறது என்றால், அதற்குக் கல்விப் பிரச்சினைதான் காரணம்." எனக் பேசினார்.
தாலிபான் ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றின. தாலிபான்கள் ஆட்சியில், அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெண்களுக்கு உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தாலிபான்களின் சத்தியத்தை அவர்கள் மீறினர். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர், பெண்களுக்கு முகத்திரை அணைவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மகளிர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.