ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற "குரல் முன்மொழிவு" வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் "பழங்குடியினர் மற்றும் டோரஸ் தீவு வாசிகளை", அம்மன்னின் முதல் குடிமக்களாக அங்கீகரிக்கவும், அரசுக்கு பழங்குடிகள் தொடர்பான ஆலோசனை வழங்கவும் "பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவுவாசிகளின் அமைப்பை" நிறுவவும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்த வாக்கெடுப்பில் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி "குரல் முன்மொழிவுக்கு" தொடர்ந்து ஆதரவளித்து வந்தது. மேலும் கடந்த ஆண்டு தேர்தலில் அந்தோணி அல்பானீஸ் வென்றபோது இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆஸ்திரேலிய மாநிலங்கள், "வேண்டாம்" என வாக்களித்ததால் இந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
ஆறு மாநிலங்களிலும் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட வாக்கெடுப்பு
இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற ஆஸ்திரேலியாவில் உள்ள 6 மாநிலங்களில், குறைந்தது 4 மாநிலங்கள், பழங்குடி மக்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், 6 மாநிலங்களும் பழங்குடி மக்களுக்கு ஆதரவான சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது குறித்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், பழங்குடி மக்களை நம்பிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். "நீங்கள் கடினமான விஷயங்களைச் செய்யும்போதும், நீங்கள் உயர்ந்த இலக்கை அடையும் போதும், சில நேரங்களில் நீங்கள் தோல்வியடைகிறீர்கள், இன்று நாம் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம்" என பேசினார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள 6 மாநிலங்களில் 4 மாநிலங்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.