Loading...
பாகிஸ்தான் தடைக்கு மாற்று வழி: சீனா வழியாக விமானங்களை இயக்க இந்தியா புதிய திட்டம்
பாகிஸ்தான் தடையால் இந்தியா சீனாவின் ஜின்ஜியாங் வழித்தடத்தை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் தடைக்கு மாற்று வழி: சீனா வழியாக விமானங்களை இயக்க இந்தியா புதிய திட்டம்

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
07:26 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் வான்பாதை மூடப்பட்டுள்ளதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் நேர விரயம் மற்றும் பெரும் எரிபொருள் செலவைக் குறைக்க, சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேலே மாற்று வான்வழிப் பாதையை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது. தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஹோட்டான் வழியாக அமையும் இந்த வழித்தடம் பயண நேரத்தைப் பெருமளவு குறைக்கும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மூலம் இது தொடர்பான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய வழித்தடம்

சுற்றுப்பாதையால் ஏற்படும் இழப்புகள்

2025 ஏப்ரல் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வான்பாதையை மூடியதால், இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் மஸ்கட்டைச் சுற்றிச் செல்ல நேரிட்டது.

இதனால் 45 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பயண நேரம் கூடி, செயல்பாட்டுச் செலவுகள் உயர்ந்தன.

குறிப்பாக, தொலைதூர விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சுமார் ரூ.4,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

இதற்குத் தீர்வாகத் தற்போது புதிய மாற்றுப் பாதை திட்டமிடப்படுகிறது. இதன்படி டெல்லி, மும்பை விமானங்கள் லே, சீனா மற்றும் கிர்கிஸ்தான் வழியாக ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்க வழித்தடங்களை எளிதில் இணைக்க முடியும்.

ஒப்பந்தம்

பேச்சுவார்த்தை நிலவரமும் அடுத்தகட்ட நகர்வுகளும்

இந்த மாற்று வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால் மத்திய ஆசியா, ஜார்ஜியா, பாகு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்குக் கணிசமான நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடைக்கும்.

இருப்பினும், இத்திட்டத்திற்கான இறுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்றும், இதற்கான காலக்கெடுவை இப்போதே நிர்ணயிக்க முடியாது என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய வான்வழிப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தம் மட்டுமின்றி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புப் பணிகளும் அவசியமாகும் என்பதால், வெளியுறவுத் துறை மட்டத்தில் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT