சூரிச் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி சஸ்பெண்ட்: மது அருந்திவிட்டு விமானம் இயக்க முயன்றதால் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படவிருந்த ஏர் இந்தியா (AI 151) விமானத்தின் தலைமை விமானி, மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பாக, தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் அந்த விமானியிடம் மதுவின் வாசனையை கண்டறிந்தனர். உடனடியாக சுவிட்சர்லாந்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மதுவின் அளவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் சிவில் ஏவியேஷன் அலுவலகம் (FOCA), அந்நாட்டு விதிமுறைகளின்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்திற்கு (DGCA) தகவல் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்திய டிஜிசிஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
ஏர் இந்தியா தரப்பு விளக்கம்
பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக தங்கள் நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவிக்கம் செய்துள்ளது.
எனினும், விமான நிறுவன மேலாண்மைக்கும் விமானிகளுக்கும் இடையே பெரிய அளவிலான இடைவெளி நிலவுவதாக மூத்த விமானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விரைவில் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தணிக்கை மேற்கொள்ள உள்ள நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் பலப்படுத்துமாறு ஏர் இந்தியாவுக்கு DGCA உத்தரவிட்டுள்ளது.