பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு
காசாவில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி குழுக்களுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்படும் என்று டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இன்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு காசா மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதனால், பாலஸ்தீன மக்களுக்கு வழங்குபட்டு வந்த இணையம், செல்லுலார் மற்றும் லேண்ட்லைன் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து, அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்தனர். இந்த இணைய துண்டிப்பால் நேற்று நடந்த தாக்குதலில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதை உடனடியாக அறிய முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பே காசா பகுதியின் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இணையமும் இல்லாமல், காசா பகுதியை முழுமையான இருள் சூழுந்துள்ளது.
காசாவுக்கு இணைய சேவை வழங்க முன்வந்தார் எலான் மஸ்க்
இந்நிலையில், காசா மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கத் தலைவர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ், "2.2 மில்லியன் மக்கள்தொகைக்கு அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய செயலை எவ்வாறு ஆதரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நடைமுறையை அமெரிக்கா வரலாற்று ரீதியாக கண்டித்துள்ளது." என்று கூறி இருந்தார். அலெக்ஸாண்டிரியாவின் இது குறித்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், "காசாவில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி குழுக்களுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதியை வழங்குவதற்காக எலான் மஸ்க்கின் விண்வெளி விமான நிறுவனமான SpaceXஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நெட்வொர்க் ஆகும்.