32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா
பாகிஸ்தானில் ஆளும் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். இதனால், நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒரு ராணுவச் சட்டத்தை விதிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தது. எனினும், பாகிஸ்தான் மீண்டும் ராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதை அந்நாட்டின் கடந்த கால வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இம்ரான் கானின் கைதுக்குப் பிறகு நடந்த போராட்டங்களில் ராணுவ வளாகங்கள் குறிவைக்கப்பட்டன. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
32 ஆண்டுகள், 3 போர்கள், 5 இராணுவச் சட்டங்கள், 4 சர்வாதிகாரிகள், 3 அரசியலமைப்புகள்
கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2007ஆம் ஆண்டு, பாகிஸ்தான் ராணுவ ஆட்சியில் இருந்தது. 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், அந்நாட்டின் பிரதமரை நீக்கி, ஆட்சிக்கு வந்தார். அவர், பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அக்டோபர் 12, 1999 அன்று நீக்கி, அக்டோபர் 14, 1999 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்தார். மேலும், அவர் நாட்டின் அரசியலமைப்பை இடைநிறுத்தி அதன் பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு முன்பு, 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அன்றைய ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சாவால் ராணுவ சட்டம் அமலுக்கு வந்தது. அவர் ராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இதை செய்ததாக கூறப்படுகிறது. 36 ஆண்டுகளில் 5 முறை ராணுவ சட்டம் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது.