மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி
வெள்ளிக்கிழமை மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் குறைந்தது 296 பேர் உயிரிழந்ததாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த 153 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.
'உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது': பிரதமர் மோடி
மேலும், பிரதமர் மோடி, "இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது." என்று மொராக்கோவிற்கு ஆதரவு கரங்களையும் நீட்டியுள்ளார். முதற்கட்ட நிலநடுக்கம் 11:11 மணியளவில் ஏற்பட்டது என்றும், அந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் கணக்கிட்டுள்ளது. இதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு மொராக்கோவில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். வட ஆபிரிக்காவில் பூகம்பங்கள் ஏற்படுவது ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், 1960இல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது அதனால், ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.