அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரையின் போது "14 ஜோர்டான் யாத்ரீகர்கள் இறந்தனர், மேலும் 17 பேர் காணவில்லை" என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிர வெப்ப அலை காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் ஜோர்டான் நாட்டவர்கள் காலமானதாக அந்த அறிக்கை கூறியது என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டுமா அல்லது ஜோர்டானுக்கு எடுத்து செல்ல வேண்டுமா சவுதி அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ஹஜ் யாத்திரையின் போது மொத்தம் ஐந்து ஈரானிய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெயில்
வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள்
இறந்தவர்கள் குறித்து சவுதி அரேபியா அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இருப்பினும், சவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அல்-அப்துலாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை 2,760 யாத்ரீகர்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறினார்.
மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பக்தர்கள் அதிக நேரம் (காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை) வெளியே இருப்பதை தவிர்க்கவும், நீரேற்றத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஹஜ் யாத்திரை புதன்கிழமை நிறைவடைகிறது.
இந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புள்ளிவிவரங்களுக்கான சவுதி பொது ஆணையம் தெரிவித்துள்ளது.