Page Loader
முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

சேப்பாக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டான் பிராட்மேனுடன் டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி 376 ரன்கள் குவித்த நிலையில், வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களில் அவுட் ஆனாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 10 போட்டிகளில் அதிக ரன் குவித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக நுழைந்துள்ளார். இந்த பட்டியலில், 1,446 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் எவர்டன் வீக்ஸ் 1,125 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜார்ஜ் ஹெட்லி 1,102 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் ஜெய்ஸ்வால் 1,094 ரன்களுடன் இடம்பெற்றுள்ள நிலையில், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 1,088 ரன்களுடன் உள்ளார். இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, ஜெய்ஸ்வாலுக்கு முன்னர், 1973இல் சுனில் கவாஸ்கர் 978 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.