மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள்
மகளிர் ஐபிஎல் 2024 ஏலத்தில் இதுவரை இல்லாத இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாத உள்ளூர் வீராங்கனை காஷ்வீ கவுதம் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். காஷ்வீ கவுதமை கைப்பற்ற உபி வாரியஸும் கடுமையாக போராடிய நிலையில், குஜராத் ஜெயன்ட்ஸ் ரூ.2 கோடிக்கு கைப்பற்றியது. காஷ்வீ இந்திய அணிக்காக விளையாண்டதில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது செயல்திறனால் பலரையும் கவர்ந்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த காஷ்வீ, பிப்ரவரி 2020 இல் நடந்த உள்நாட்டு யு19 ஒருநாள் போட்டியில் அனைத்து பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அந்தச் சாதனையிலிருந்து, அவர் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுகிறார்.
ரூ.1.3 கோடிக்கு விருந்தா தினேஷை கைப்பற்றிய உபி வாரியர்ஸ்
காஷ்வீயைப் போல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மற்றொரு இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீராங்கனை விருந்தா தினேஷ் ஆவார். உபி வாரியர்ஸ் அவரை ரூ.1.3 கோடிக்கு சாதனை படைத்துள்ளார். 22 வயதான தினேஷ், உள்நாட்டில் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். அவர் ஒரு டாப்-ஆர்டர் பேட்டர் மற்றும் லெக் பிரேக்கிலும் பந்து வீசக்கூடியவர் ஆவார். இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை என்றாலும், அவர் ஏற்கனவே இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஏசிசி வளர்ந்து வரும் அணிகள் கோப்பையில் பட்டத்தை வென்ற 23 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் விருந்தா தினேஷ் இடம்பெற்றிருந்தார். அதில் வங்கதேசத்திற்கு எதிராக இறுதிப்போட்டியில் 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.