மகளிர் IPL 2024: வெற்றி கோப்பையை தட்டி தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தாண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது, ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் 16 ஆண்டுகள் கழித்து பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு அணி, இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற இறுதி போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. எனினும் பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக, டெல்லி அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலக்கை ஆர்சிபி அணி, ஆரம்பத்தில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் இணை வெளிப்படுத்திய நிதானமான ஆட்டத்தில் அதிக ரன்களை பெற்றது. இறுதியாக, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. பெங்களூரு அணியில் எல்லிஸ் பெர்ரி, 37 பந்துகளில் 35 ரன்களும், ரிச்சா, 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். தொடரை கைப்பற்றிய அணிக்கு, வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி.