உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு
இன்று நடைபெற்று வரும் இந்தியா Vs ஆஸ்திரேலியா ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, 'ஃப்ரீ பாலஸ்தீனம்' என்ற டி-சர்ட் அணிந்த ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரின் வெள்ளை நிற டி-சர்டின் முன்பக்கத்தில் 'பாலஸ்தீனத்தின் மீது குண்டு வீசுவதை நிறுத்துங்கள்' என்றும், பின்புறத்தில் 'பாலஸ்தீனத்தை விடுதலை செய்' என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அவர் பாலஸ்தீன நிறத்தில் முகக்கவசமும் அணிந்திருந்தார். அவர் திடீரென்று ஆடுகளத்திற்குள் நுழைந்ததும், பாதுகாப்பு மீறலின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அகமதாபாத்தில் கூடி இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா Vs ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக கிரிக்கெட் ஆர்வலர்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கூடியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனம் இன்று இந்த போட்டியின் மீது தான் இருக்கிறது. இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக ஒருவர் 'ஃப்ரீ பாலஸ்தீனம்' என்ற டி-சர்ட்டை அணிந்து கொண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆடுகளத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று காலை, போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காசாவுக்கு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.