ஒருநாள் உலகக்கோப்பை : கட்டை விரலில் காயம்; கேன் வில்லியம்சனுக்கு மூன்று போட்டிகளில் ஓய்வு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்தபோது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அடுத்த மூன்று ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடாமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 ஐபிஎல் சமயத்தில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ஓய்வில் இருந்த கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடந்த அதன் மூன்றாவது போட்டியில்தான் முதல்முறையாக களமிறங்கினார். ஆறு மாதங்களுக்கு பிறகு தனது மறுபிரவேச போட்டியில் சிறப்பாக விளையாடி 78 ரன்கள் எடுத்த நிலையில், கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிட்டயர்டு ஹர்ட் எடுத்து அவர் வெளியேறினார்.
மூன்று போட்டியில் ஓய்வு
ரிட்டயர்டு ஹர்ட் கொடுக்கப்பட்டு வெளியேறிய நிலையில், கேன் வில்லியம்சனுக்கு எக்ஸ்-ரே சோதனை எடுக்கப்பட்டது. அதில் கட்டை விரலில் எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு அடுத்த மூன்று போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 18 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கும், அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவிற்கும் மற்றும் அக்டோபர் 28 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கும் எதிரான போட்டிகளில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார். மேலும், நவம்பரில் எஞ்சியிருக்கும் மூன்று லீக் ஆட்டங்களில் அவரது பங்கேற்பும், எவ்வளவு விரைவாக அவர் குணமடைவார் என்பதைப் பொறுத்தது என கூறப்படுகிறது.