சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகிய மூன்று வுஷு வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக சீனாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 10 வீரர்களை இந்தியா அனுப்பிய நிலையில், மூன்று வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும், இதர 7 வீரர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட மீதமுள்ள குழு, சீனாவுக்கு கிளம்பியுள்ளது. நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவர்களது பின்னணியை இதில் பார்க்கலாம். நைமன் வாங்சு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1வது கேலோ இந்தியா மகளிர் சீனியர் நேஷனல் வுஷு லீக்கில் பங்கேற்ற அணியில் இடம்பெற்றதோடு, அதில் தங்கமும் வென்றார்.
சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மெபுங் லாம்கு
சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொள்ளவிருந்த ஒனிலு தேகா, 2022 அக்டோபரில் குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் மனிஷா பதியை தோற்கடித்து கவனம் ஈர்த்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேகாவின் தகுதி கடந்த ஜூலை 1இல் உறுதி செய்யப்பட்டது. மெபுங் லாம்குவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியின் போது தைஜிகுவான் மற்றும் தைஜிஜியன் ஆல்ரவுண்ட் போட்டிகளில் தங்கம் வென்றார். மேலும், பிப்ரவரி 2022இல் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப்பின் போது லாம்கு தைஜிகுவானில் தங்கம் வென்றார். இதற்கிடையே, இந்திய வீரர்களை அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.