மாற்றுத் திறனாளிகள் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல பயிற்சி : பிரதமர் மோடி
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் உச்ச நிகழ்வாகக் கருதப்படும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல, பாரா தடகள வீரர்களுக்கு தனது அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) தெரிவித்தார். 77வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் கூட தங்களது பொருளாதார நிலையையும் மீறி, விளையாட்டு உலகில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். "மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உழைக்கும்போது, பாராலிம்பிக்கில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்குக்கும் நாங்கள் உதவுகிறோம்." என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.
பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியர்களின் சமீபத்திய சாதனைகள்
ஒலிம்பிக்கைப் போலவே, பாராலிம்பிக் போட்டியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இதில் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். கடைசியாக டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் 2020 இல் இந்திய அணி தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி ஐந்து தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கலம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவனி லெகாரா, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் சுமித் ஆன்டில், துப்பாக்கி சுடுதலில் மணீஷ் நர்வால், பேட்மிண்டனில் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றனர்.