இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது யோ-யோ பிட்னஸ் டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலான சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் கடுமையான வழிகாட்டுதலைக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழிகாட்டுதலின் கீழ், ரகசிய தகவலின் கீழ் வரும் யோ-யோ டெஸ்ட் ஸ்கோர்களை சமூக ஊடக தளங்களில் வெளியிட வேண்டாம் என்று வீரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிசிசிஐயின் உயர் நிர்வாகத்திடம் இருந்து இந்த உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பைக்கு முன்னதாக வீரர்களுக்கு யோ-யோ பிட்னஸ் டெஸ்ட்
ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பெங்களூரில் உள்ள ஆலூரில் உடற்பயிற்சி மற்றும் ஆயத்த முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமின் முதல் நாளில், விராட் கோலியைத் தவிர, ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவும் முதல் நாளில் யோ-யோ டெஸ்டில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், யோ-யோ டெஸ்டில் 17.2 புள்ளிகள் எடுத்து தேர்ச்சி பெற்றதா விராட் கோலி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, அலெர்ட்டான பிசிசிஐ வாய்மொழியாக வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.