Loading...
யு-19 ஆசியக் கோப்பை: UAE அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
யு-19 ஆசியக் கோப்பையில் யுஏஇ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

யு-19 ஆசியக் கோப்பை: UAE அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
09:02 pm

செய்தி முன்னோட்டம்

ஓமனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏசிசி யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், யுஏஇ அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய இளம் அணி கம்பீரமாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர் ஆரியவீர் சேவாகின் அபாரமான 160 ரன்கள் மற்றும் வி.கே. வினீத்தின் அரைசதத்தின் துணையுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய யுஏஇ அணி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷான் சூத்தின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

ஆதிக்கம்

193 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் இந்தியாவின் பேட்டிங்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, கேப்டன் லக்ஷ்யா ராஜேஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து களத்தில் இணைந்த ஆரியவீர் சேவாக் மற்றும் வி.கே. வினீத் ஜோடி எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 2-வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து அசத்தியது.

நிதானத்துடன் தொடங்கி ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் 168 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 160 ரன்கள் விளாசினார். அவருக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளித்த வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

இறுதிக்கட்டத்தில் யஷ்பர்தன் சவுகான் 17, அன்வே டிராவிட் 12 ரன்கள் எடுக்க, இந்தியா 309 ரன்களை எட்டியது.

பந்துவீச்சு

இஷான் சூத்தின் பந்துவீச்சு வேட்டை மற்றும் யுஏஇ தோல்வி

310 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில், அகமது குடாதாத் 74 ரன்களும், நூருல்லா அயோபி 39 ரன்களும் எடுத்துப் போராடினர். எனினும், இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கட்டுக்குள் வைத்தனர்.

சிறப்பாகப் பந்துவீசிய இஷான் சூத் 7 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

மனல் சவுகான், காவ்ய படேல், ஆர்யன் சவ்சானி, அர்ஜுன் ராஜ்புத் உள்ளிட்டோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, யுஏஇ அணி 49.6 ஓவர்களில் 239 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

ADVERTISEMENT