ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
செவ்வாய்கிழமை (மே 2) அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாறியது. இந்தியா தற்போது 121 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 116 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முன்னதாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்ற பிறகு இந்த மாற்றம் நடந்துள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 தரவரிசைகளில் இந்திய அணியின் நிலைமை
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில், டி20 தரவரிசையில் இந்திய அணி தனது நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 267 ரேட்டிங் புள்ளிகளுடன், டி20 உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்தை விட இந்தியா சற்று முன்னேறி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 259 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒருநாள் தரவரிசையை பொறுத்தவரை, இந்திய அணி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. வீரர்கள் தரவரிசையை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில், அஸ்வின் ரவிச்சந்திரனும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தில் உள்ளனர். டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்