ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்?
அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் விலகிய நிலையில், ராகுல் டிராவிட் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு, அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மேலும், நாக் அவுட் கட்டங்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததால், அணியின் கேப்டன் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
விமர்சனங்கள் இல்லாமல் வெளியேற நினைக்கும் ராகுல் டிராவிட்
ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை வெற்றி பெற்றால், ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பனிக்காலம் நீட்டிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த காலங்களில் இந்திய அணியின் தோல்விகளின்போது பயிற்சியாளர்கள் பலிக்கடாவாக்கப்பட்ட சம்பவங்களே மிக அதிகம். இதனால், வெற்றியுடன் பயிற்சியாளர் பொறுப்பை முடித்துக் கொள்ள ராகுல் டிராவிட் நினைப்பதாக தெரிகிறது. எனினும். இந்தியா கோப்பையை வெல்லாதபட்சத்தில் என்ன நடக்கும் என்பதில் தெளிவில்லாத சூழல் உள்ளது. இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு ராகுலை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக வைத்துக் கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் யோசனையும் பிசிசிஐ வசம் உள்ளதால் அடுத்த பயிற்சியாளர் என்ற கேள்விக்கான விடையில் மர்மம் நீடிக்கிறது.