டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்
இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கரீபியன் தீவில் 3 நாள் காத்திருப்புக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர்கள் கோப்பையுடன் வீடு திரும்பினர். விமானத்தில் இருந்து வீரர்கள் கோப்பையை எடுக்கும் வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை வரவேற்க அதிகாலை முதலே ரசிகர்கள் விமான நிலையில் கூடியிருந்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா கையில் கோப்பையுடன் வெளியே வர, ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இந்தியா வந்தடைந்த உலகக்கோப்பை
உற்சாக வரவேற்பு
உற்சாக வரவேற்பு
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு
சுமார் 18 மணிநேர நீண்ட பயணத்திற்குப் பிறகு, அணி இறுதியாக இந்தியாவில் தரையிறங்கியுள்ளது. இவர்களை காண விமான நிலையத்தில் ரசிகர்கள் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதோடு, வீரர்கள் தங்கவுள்ள ஹோட்டலிலும் குழுவினரின் வரவேற்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகக்கோப்பையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு கேக் ஒன்று அணிக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய மூவர்ணக் கொடியைக் குறிக்கும் வரவேற்பு பானங்களும் முழு அணியினருக்கும் தயாராக உள்ளன. அதன் பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். இந்த சிறப்புச் சந்திப்பைத் தொடர்ந்து, குழுவினர் மும்பைக்கு செல்கின்றனர். அங்கே நரிமன் பாயிண்டில் இருந்து தொடங்கி வான்கடே மைதானம் வரை ரசிகர்களுக்காக சிறப்பு ரோடு ஷோ நடத்துவார்கள். இந்த ரோட் ஷோவில் பங்குபெற கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களை அழைத்துள்ளார்.