ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வி; இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்த அரசு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடியதை அடித்து, இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக் குழுவை நியமிக்கும் வரை, இடைக்காலக் குழு அமைக்கப்படுவதாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் திங்களன்று (நவம்பர் 6) தெரிவித்துள்ளது. இலங்கை தனது ஏழு உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்ததோடு, கடைசியாக நடந்த இந்தியா உடனான மோதலில் 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இலங்கையில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகக்குழுவை கடுமையாக விமர்சித்த விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவினரை துரோகிகள் மற்றும் ஊழல்வாதிகள் என்று கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதுடன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்திற்கு முன்பாக ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அதன் செயலாளர் மொஹான் டி சில்வா சனிக்கிழமை பதவி விலகினார். எனினும், கோபம் குறையாத அமைச்சர் திங்கட்கிழமை மீதமுள்ள நிர்வாக உறுப்பினர்களை நீக்கி, அவர்களுக்குப் பதிலாக உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஏழு பேர் கொண்ட குழுவில் ரணதுங்கவுடன் இரண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர்.