ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த அணி 18 சிக்சர்கள் விளாசி இந்த அபார இலக்கை நிர்ணயிக்க உதவியுள்ளனர். ஹோம்லாண்டில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் முதலில் மயங்க் அகர்வால் - ட்ராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி கட்டிய இந்த பாட்னர்ஷிப்பை 5ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார்.
அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்
களத்தில் அதிரடி ஆட்டம் காட்டி, 18 பந்துகளில் அரைசதம் கடந்து, ஹைதராபாத் அணியில் அதிவேகமாக அரைசதம் கடந்தவர் என்ற பெருமையை பெற்றார் ட்ராவிஸ் ஹெட். அவருக்கு அடுத்து, மட்டையை சுழற்றிய அபிஷேக் சர்மா, 7 சிக்சர்கள் அடித்து, 16 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஹென்ரிச் கிளாசென் 7 சிக்சர்ஸ் அடித்து, 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இப்படி அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டி, அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தது. முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி 263 ரன்களை எடுத்திருந்ததே ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆட்டத்தின் இறுதியில், 31 ரன்களில் தோல்வியை தழுவியது MI அணி.