Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. விராட் கோலி அதிகபட்சமாக 101 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, ரவீந்திர ஜடேஜாவின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் படுதோல்வியை சந்தித்தது. அந்த அணியில் மார்கோ ஜான்சன் அதிகபட்சமாக 14 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதமடித்தார். மிகவும் நிதானமாக ஆடிய விராட் கோலி, கடைசி வரை அவுட்டாகாமல் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை நிறைவு செய்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி தற்போது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி களமிறங்கியது. ஏடிபி 1000 நிகழ்வுகளில் ஒன்றான இதில் மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சாலஸ் மற்றும் பிரான்சின் எட்வார்ட் ரோஜர்-வாசெலின் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 2-6, 7-5, [7-10] என்ற செட் கணக்கில் போராடி தோற்றது. போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி இந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவுவது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கலாம் எனும் நிலையில், அந்த வாய்ப்பையும் இதன்மூலம் போபண்ணா ஜோடி இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சுனில் நரைன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் சுனில் நரைன் தனது எட்டு ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வை அறிவித்துள்ளார். அவர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆகஸ்ட் 2019இல் டி20 போட்டியில் விளையாடினார். அதன் பின் வாய்ப்பு கிடைக்காத நிலையில், விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக விளையாடி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். 2011இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர், 122 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஆறு டெஸ்ட், 65 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகள் அடங்கும்.
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி
ஞாயிற்றுக்கிழமை ஜார்க்கண்டில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி பட்டம் வென்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய விளையாட்டு வீராங்கனைகள் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றனர். மேலும், இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 3 கோல்களை இந்தியா அடித்த நிலையில், ஜப்பான் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 2016க்கு பிறகு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இரண்டாவது முறையாக வென்றுள்ளது.