Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் 2024ல் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் சனிக்கிழமை அறிவித்தது. முன்னதாக, ஜோ ரூட் அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு 2023 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டார். அதில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜோ ரூட், 10 ரன்கள் மட்டுமே எடுத்ததோடு, இரண்டு ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த விவாதத்தின்போது, ஜோ ரூட் தான் 2024 ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அவர் அணியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை 2023-24 : 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது தமிழகம்
விஜய் ஹசாரே கோப்பை 2023-24இல் சனிக்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் கோவாவை வீழ்த்தியது. முன்னதாக, முதலில் தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 125 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த கோவா 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழக அணியின் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், தமிழக அணி தனது முதல் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி
சனிக்கிழமை நடைபெற்ற 13வது தேசிய சாம்பியன்ஷிப் ஆடவர் சீனியர் ஹாக்கி போட்டி காலிறுதி ஆட்டத்தில் தமிழகம் உத்தரப்பிரதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் முதல் பாதி முழுவதும் கடும் போட்டி நிலவிய நிலையில் 27வது நிமிடத்தில் சுந்தரபாண்டி ஒரு கோல் அடித்து தமிழகத்தை முன்னிலை பெறச் செய்தார். ஆனால் 30வது நிமிடத்தில் அடுத்தடுத்து மனிஷ் ஷஹானி மற்றும் சுனில் யாதவ் இரண்டு கோல்களை அடிக்க உத்தரப்பிரதேசம் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தமிழ்நாடு கடுமையாக போராடினாலும், உத்தரப்பிரதேசத்தின் கட்டமைப்பை மீறி கோல் அடிக்க முடியாத நிலையில், கேப்டன் ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி 52 மற்றும் 59வது நிமிடங்களில் கோல் அடிக்க, தமிழகம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சீனா மாஸ்டர்ஸ் 2023 : இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்திய ஜோடி தகுதி
சீனா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். முன்னதாக, சனிக்கிழமை நடந்த அரையிறுதி போட்டியில் சீன ஜோடியான ஹீ ஜி டிங் மற்றும் ரென் சியாங் யூவை 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். இதையடுத்து இறுதிப்போட்டியில் உலக ஸீட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சீன ஜோடியான லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங்கை எதிர்கொள்ள உள்ளனர். சாத்விக் மற்றும் சிராக் ஜோடி இந்த ஆண்டு ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், இந்தோனேசியா சூப்பர் 1000, கொரியா சூப்பர் 500, சுவிஸ் சூப்பர் 300 மற்றும் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள யு-19 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழு 15 பேர் கொண்ட அணியையும், அணியுடன் பயணம் செய்யும் மூன்று காத்திருப்பு வீரர்களையும் தேர்ந்தெடுத்தது. மேலும், தேர்வுக் குழு கூடுதலாக நான்கு ரிசர்வ் வீரர்களையும் அறிவித்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வீரர்கள் ஆசிய கோப்பைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் அணியுடன் பயணிக்க மாட்டார்கள். டிசம்பர் 8 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் உதய் சஹாரன் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.