Sports Round Up : பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 399 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஹென்றிச் கிளாசேன் 109 அதிகபட்சமாக ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 170 இழந்து ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்த உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை
சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய தில்ஷன் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி சமரவிக்ரமவின் அதிரடியால் 49வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் சர் பாபி சார்ல்டன் காலமானார்
இங்கிலாந்து கால்பந்து அணிக்காக 1966இல் பிபா கால்பந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் சர் பாபி சார்ல்டன் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. கடந்த 2020 முதலே டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இங்கிலாந்து அணி மட்டுமல்லாது ஐரோப்பாவின் பிரபல கால்பந்து லீக் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக சர் பாபி சார்ல்டன் நீண்ட காலம் விளையாடியுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியின் யூத் சிஸ்டம் மூலம் கிளப்பில் நுழைந்த அவர், அதன் பின்னர் அணியின் ஜாம்பவான்களில் ஒருவராக மாறினார். இந்நிலையில், அவரது மறைவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 முழுக்க முழுக்க இந்தியாவில் தான்; ஐபிஎல் தலைவர் அறிவிப்பு
2024ஆம் ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2024 சீசன் வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தலைவர் அருண் சிங் தாக்கூர் வெளியிட்டுள்ள தகவலில் பொதுத்தேர்தலால் ஐபிஎல்லை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புவதாகவும், போட்டியை திட்டமிட இன்னும் போதுமான அளவு காலம் இருப்பதால், முழுக்க முழுக்க இந்தியாவில் போட்டி நடத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, 2009 மற்றும் 2014 பொதுத்தேர்தல்களின்போது ஐபிஎல் போட்டி வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதேநேரத்தில் 2019 தேர்தலின்போது எந்த சிக்கலும் இல்லாமல், தேர்தலுக்கு மத்தியில் போட்டியை முழுமையாக இந்தியாவிலேயே பிசிசிஐ நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் ஓபன் அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார். தனது பழைய எதிரியான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். ஒருமணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 18-21, 21-19 மற்றும் 7-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்தார். போட்டிக்கு மத்தியில் இரண்டு வீராங்கனைகளை வார்த்தை மோதலில் ஈடுபட்டதற்காக இருவருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்க்டிக் ஓபனிலும் அரையிறுதியில் தோல்வியை சந்தித்த பிவி சிந்து, இந்த சீசனில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.