Sports Round Up: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து; ஒலிம்பிக்ஸை நடத்த தயாராகும் குஜராத்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!
நேற்று நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் 15வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்ப பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழையின் காரணமாக 50 ஓவர்கள் போட்டியானது 43 ஓவர்கள் கொண்ட போட்டியாகக் குறைக்கப்பட்டு, தாமதமாகவும் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி, இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி 245 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர்கள் சொதப்ப, தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது நெதர்லாந்து அணி. இறுதியில் 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது தென்னாப்பிரிக்கா. 38 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்காக சீனா சென்ற இந்திய வீரர்கள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது, வரும் அக்டோபர் 22 முதல் அக்டோபர் 28ம் தேதி வரை சீனாவின் ஹாங்சௌ மாகானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த பாரா விளையாட்டுப் போட்டிகளில் 17 போட்டிகளில் பங்கு பெற 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் உட்பட 303 விளையாட்டு வீரர்களை அனுப்பியிருக்கிறது இந்தியா. இவர்களில் 123 தடகள வீரர்களும் அடங்குவர். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. இந்த முறை ஐந்து போட்டிகளில் முதல் முறையாக இந்திய வீரர்கள் கலந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்:
நடப்பு ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இந்தியாவிற்கு எதிராக தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோப்ர 20) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது பாகிஸ்தான். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வீரர்களில் பெரும்பாலானோர் வைரஸ் காய்சலால் அவதிப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு வெளியே சாப்பிடச் சென்ற நிலையில், அவர்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. பல முக்கிய வீரர்கள் குணமான நிலையில், சில வீரர்களுக்கு இன்னும் காய்ச்சல் தொடர்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்த காய்ச்சல் காரணமாக பாகிஸ்தான் அணியின் விளையாடும் 11ல் குறைந்தபட்சம் இரண்டு மாற்றங்களாவது இருக்கும் என கூறப்படுகிறது.
2036 ஒலிம்பிக்ஸிற்கு தயாராகும் குஜராத்:
சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழு சந்திப்பை மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்த போது, 2036ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு முன்னதாக, ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்துவதற்கான முன்னோட்டமாக 2029 யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தவும் ஆர்வம் காட்டியிருக்கிறார் அவர். இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்புப் பணிகளை துவக்கியிருக்கிறது அம்மாநில அரசு. இது குறித்து மத்திய அரசும் குஜராத் மாநி அரசுக்கு அனுமதி அளித்திருப்பதாகத் தெரிகிறது. 2036 ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கு இந்தியாவிற்கு போட்டியாக போலாந்து, மெக்ஸிலோ மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் 2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் நாடு தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறது.
டி20 போட்டிகளில் அதிவேக 50 ரன்கள்:
தற்போது இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பைத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ராஞ்சி மற்றும் ரயில்வே அணிகள் மோதிய போட்டியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜின் அதிகவேக 50 ரன்கள் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து சாதனை படைத்திருந்தார் யுவராஜ். தற்போது ரயில்வே அணிக்கா விளையாடி வரும் இந்திய வீரர் அஷூடோஷ் ஷ்ரமா, ராஞ்சி அணிக்கு எதிராக 11 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனையைப் படைத்திருக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாள அணியின் தீபேந்தர் சிங் அயிரி, மங்கோலியா அணிக்கு எதிராக 9 பந்துகளில் அரைசதம் கடந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.