Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹ்மான் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 42.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 89 ரன்களும், கேன் வில்லியம்சன் 78 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஜாம்பவான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ள முன்னணி கிரிக்கெட் கிரிக்கெட் வீரர் அலஸ்டைர் குக் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற குக், அதன் பிறகு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் எஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். எஸ்ஸெக்ஸ் அணியில் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க குக் மறுத்துவிட்டார் என முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இது, அவர் ஓய்வு முடிவை அறிவிப்பது குறித்த ஆலோசனையில் இருப்பதாக ஊகங்களை கிளப்பிய நிலையில், அலஸ்டைர் குக் தற்போது அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்துள்ளார்.
மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி
கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டேகா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் மலேசியா இந்தியாவை வீழ்த்தியது. மினி ஆசிய கோப்பை என வர்ணிக்கப்படும் இந்த போட்டியில் 2001க்கு பிறகு முதல் முறையாக பங்கேற்ற இந்திய அணி அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் மலேசியாவின் தாக்குதலை சமாளிப்பதில் இந்தியா சுணக்கம் காட்டியதால் பின்னடைவை சந்தித்தது. இது இரண்டாவது பாதியிலும் தொடர்கதையாக மாறியதால், இறுதியில் 2-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்ந்தது. மலேசியா இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதையடுத்து, இந்திய அணி அடுத்த மாதம் குவைத்தில் நடக்க உள்ள 2026 பிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளது.
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, மும்பையில் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள 141வது கமிட்டி கூட்டத்தில் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். இதன் மூலம், 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது. கடைசியாக மற்றும் ஒரே ஒரு முறை 1900ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் மட்டுமல்லாது, ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய போட்டிகளையும் 2028இல் சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு
2023 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில்லை ஐசிசி தேர்வு செய்துள்ளது. முன்னதாக இந்த விருதுக்கு கில்லுடன், முகமது சிராஜ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோரது பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன. எனினும், செப்டம்பர் மாதத்தில் 80 என்ற உச்சபட்ச சராசரியில் 480 ரன்களை எடுத்ததன் மூலம், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கிடையே, மகளிர் கிரிக்கெட் பிரிவில் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனையாக சாமரி அட்டப்பட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இலங்கை பெற்ற வரலாற்று வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.