Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பம் மாதம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்து வந்த கவுதம் காம்பிர் அங்கு தனது ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார். 2011 முதல் 2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ள கவுதம் காம்பிர், அணிக்காக இரண்டு முறை கோப்பையையும் வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து டி20 தொடரை ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவு
மே 2024இல் திட்டமிடப்பட்ட நெதர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டிசம்பர் முதல் ஜனவரி வரையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அதன் பின்னர், பிப்ரவரி மற்றும் மார்ச்சில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு நியூசிலாந்தும், மே மாதத்தில் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதையடுத்து மே மாதம் நெதர்லாந்து தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், குறுகிய காலத்தில் நெதர்லாந்து தொடரை முடித்து உலகக்கோப்பைக்கு செல்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி
சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 765 ரன்கள் குவித்து அபாரமாக செயல்பட்ட விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புதன்கிழமை (நவம்பர் 22) ஐசிசி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இரண்டாவது இடத்தில் நீடிக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 4 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அசத்தி வருகின்றனர்.
பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 9 பதக்கங்களை வென்றது இந்தியா
புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வலுவான அணியான தென் கொரியாவை வீழ்த்தி 9 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றது. தென் கொரியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் போட்டியை நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப்பிடித்தது. இந்திய வில்வித்தை வீரர்கள் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு என அனைத்து விதமான பிரிவுகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ராகேஷ் குமார் ஆடவர் தனி நபர் பிரிவு, ஆடவர் மற்றும் காம்பவுண்ட் அணி பிரிவுகளில் ஹாட்ரிக் தங்கம் வென்றார்.
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வி
BWF உலக பேட்மிண்டன் தொடர்களில் இந்த சீஸனின் கடைசி நிகழ்வான சீன மாஸ்டர்ஸ் போட்டியில் புதன்கிழமை இந்திய நட்சத்திர வீரர்களான லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோற்று வெளியேறினார். இந்த ஆண்டு கனடா ஓபனை வென்ற உலகின் நம்பர் 17 வீரரான லக்ஷ்யா சென், 19-21 18-21 என்ற கணக்கில் ஏழாவது நிலை வீரரான சீன ஷி யூகியிடம் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் உலகின் 24 ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் 15-21 21-14 13-21 என்ற கணக்கில் உலக சாம்பியன் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னிடம் தோல்வியடைந்தார். இந்த சீசனில் நான்கு காலிறுதிப் போட்டிகளை மட்டுமே பெற்றுள்ள ஸ்ரீகாந்த் உலக சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது முதல் சுற்றில் வெளியேறினார்.