Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் நம்பர் 1 இடம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது. அவரை பின்னுக்குத் தள்ளி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். நவம்பர் 1 முதல், புனேவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் உட்பட உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் மஹாராஜ் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால், தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்த மகாராஜ், தற்போது முதலிடத்தை கைப்பற்றி இருந்தாலும், அவருக்கும் முகமது சிராஜுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்சில் எம்எஸ் தோனியின் கையில் பென் ஸ்டோக்சின் எதிர்காலம்
தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை முடிந்தவுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் கலந்தாலோசித்த பிறகு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், அதற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸை அணியிலிருந்து வெளியேற்ற சிஎஸ்கே என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. எனினும் அந்த ஊகங்கள் குறித்து பதிலளித்த சிஎஸ்கே உயர்மட்ட வட்டாரங்கள், இது குறித்து நவம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு தோனி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளனர். தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை வெளியிடுவதற்கான காலக்கெடு நவம்பர் 26 வரை நீட்டிக்கப்படுவதால், இதுகுறித்து முடிவு செய்ய 10 நாட்களுக்கு மேல் உள்ளது.
ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை
2023ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலக தடகள வீரர் விருதுக்கு ஐந்து தடகள வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா பெயரும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உலக தடகள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான்கு பகுதி சங்கங்களில் இருந்து நான்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து விளையாட்டு வீரர்கள், 2023 ஆம் ஆண்டில் பல்வேறு தடகளத் துறைகளில் சிறப்பான செயல்திறனைப் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் ஆண்டின் சிறந்த ஆடவர் தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர வீரர்கள் அமெரிக்காவின் குண்டு எறிதல் வீரர் ரியான் க்ரூசர், ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ், ஸ்வீடனின் போல் வால்ட் வீரர் மொண்டோ டுப்லாண்டிஸ் மற்றும் கென்யாவின் மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் ஆவர்.
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கவிருக்கும் இந்திய சுற்றுப்பயணத்திற்கான 16 வீராங்கனைகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) அறிவித்தது. ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மும்பையில் இரண்டு மைதானங்களில் நடைபெறும். அந்த அணியின் நீண்ட கால கேப்டன் மெக் லானிங் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய கேப்டன் அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படுவார். மும்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக உள்ளூர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தொடக்கச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். 63 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீன தைபேயின் லு சிங் யாவ் மற்றும் யாங் போ ஹான் ஜோடியிடம் 21-16, 18-21, 16-21 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தனர். உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சாத்விக் மற்றும் சிராக், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் லு மற்றும் யாங்கை தோற்கடித்திருந்தனர். ஆனால் தற்போது இந்தியர்களை விஞ்சும் வகையில் உற்சாகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தைவான் ஜோடியை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.